தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்த், நாளை தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவர், ஒரு சகாப்தமாகவே மாறிவிட்டார்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். வழக்கமாகத் தனது பிறந்தநாளன்று சென்னையில் இருப்பதைத் தவிர்ப்பது ரஜினியின் வழக்கம். இதனால் அவரை வாழ்த்த வரும் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைவதுண்டு.
இந்த முறையாவது 75-வது பிறந்தநாள் என்பதால் ரஜினி ரசிகர்களைச் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து ரஜினி தரப்பில் விசாரித்தபோது, “வழக்கம் போல இந்த வருடமும் பிறந்தநாளன்று ரஜினிகாந்த் சென்னையில் இல்லை. எனவே அவர் ரசிகர்களைச் சந்திக்க வாய்ப்பில்லை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பல்வேறு நற்பணிகள் மூலமாகவும் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.