தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தனது செல்வாக்கை நிரூபிக்கவும் ஆட்சியைத் தக்கவைக்கவும் மாநிலம் முழுவதும் பல்வேறு தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் பிரம்மாண்டமான மகளிர் மாநாட்டிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டுத் திடலில், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டை முன்னிட்டு பல்லடம் பகுதியில் மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தை முறைப்படுத்தவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 13 மாவட்டங்கள் மற்றும் 39 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து வரும் பெண்களுக்கு மாவட்டம் வாரியாக தனித்தனி நிறங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வெளியூர்களில் இருந்து வரும் சுமார் 4,000 வாகனங்களை நிறுத்துவதற்குத் தேவையான பார்க்கிங் வசதிகளும் தங்குதடையின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை வெறும் கூட்டமாக மட்டுமின்றி, ஒரு கலைத் திருவிழாவாகவும் திமுக முன்னெடுத்துள்ளது. இதற்காக பறையிசை, சிலம்பம் மற்றும் கண்கவர் வானவேடிக்கை போன்ற தமிழகத்தின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் எதிர்கால அரசியல் கடமைகள் குறித்து இந்த மாநாடு விரிவாக விவாதிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதோடு, பெண்களுக்கான சில முக்கிய அறிவிப்புகள் இந்த மேடையில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.