சென்னை: தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிக பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றான ‘படையப்பா’ திரைப்படம், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், ரீ-ரிலீஸுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட புத்தம் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைத்துறையில் ரஜினிகாந்த் தனது பொன்விழா ஆண்டை (50வது ஆண்டு) கொண்டாடும் வகையிலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டும், டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 7 மணிக்கு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியாகி, மாபெரும் வெற்றிபெற்ற இந்தத் திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லி நீலாம்பரியாக நடிகை ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
புதிதாக வெளியாகியுள்ள இந்த டிரெய்லரும் ரசிகர்களை மீண்டும் அந்த மாய உலகிற்குள் அழைத்துச் சென்றுள்ளது. குறிப்பாக, படத்தில் ரஜினியின் ட்ரேட்மார்க் வசனமான “போடா… ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்!” போன்ற பிரபலமான வசனங்களும், ஆக்ஷன் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே, ரஜினிகாந்த் இந்தப் படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உட்படப் பலரும் இந்த டிரெய்லரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான ‘படையப்பா’வை திரையரங்கில் காணத் தயாராகும்படி ரசிகர்களை வலியுறுத்தியுள்ளனர்.
விரைவில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகவுள்ள ‘படையப்பா’ மீண்டும் ஒருமுறை வசூல் வேட்டை நடத்தத் தயாராகிவிட்டது என்பதில் சந்தேகமில்லை.